Thursday 29 January 2015

யாழ் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை - தீர்வினை நோக்கி முன்னேறுவதற்கான முன்மொழிவுகள்!

யாழ் குடாநாட்டு மக்கள் அனைவருக்கும்,
இன்றைய யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனையில் காணப்படும் மிகமுக்கியமான கடிந்து சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் பிரச்சனை சார் விஞ்ஞான தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் இருப்பதாகும். இது மக்களிடையே அனாவசிய பயத்தினையும், பீதியினையும், யதார்த்தத்திற்கு மீறிய கற்பனை குதிரைகளையும் வலம் வரச்செய்கிறது.

பிரச்சனை சார் விஞ்ஞான தகவல் எனும்போது இதனை இரண்டு பகுதிகளாக இங்கு கூறலாம், முதலாவது ஒவ்வொரு கிணற்றையும் முறைப்படுத்திய இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததா இல்லையா என்பதனை அறிந்து கொள்ளும் வழிமுறையும், பாதிப்பின் அளவு எவ்வளவு, இந்த பாதிப்பு அதிகரிக்கும்போது எப்படியான குணங்குறிகள் நீரில் காணப்படும் என்பது பற்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவதாகும்.

இதற்கான அரச பொறுப்பு நிறுவனங்கள் நீர்வள சபை (http://www.wrb.gov.lk/), மத்திய சூழல் அதிகாரசபை (http://cea.lk/), சுகாதார அமைச்சு அலுவலகம் (http://www.jaffnahealth.org/english/view.php?jaffnahealth=3)   என்பனவாகும். எனினும் பிரச்சனையின் அளவு பெரிதாக இருப்பதால் (உத்தியோக பற்ற்ற தகவலின் படி 1500 இற்கு மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதால்) மேற்குறித்த நிறுவனங்களில் காணப்படும் ஆய்வு கூட வசதிகள் மூலம் இவற்றை உடனடியாக கண்டறிவதற்கான சாத்தியகூறுகள் மிக குறைவானது. மேலும் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தால் இன்னும் சிக்கலாகும் என்பதனை எதிர்பார்க்கலாம்.

இத்தகைய நிலைமையில் தீர்வு என்ன? இருக்கின்றது! கையடக்க ஐதரோகாபன் கண்டறி கருவிகள், இவை பொதுவாக மத்தியகிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறு உள்ள பிரதேசங்களில் ஆய்வாளர்கள் வைத்திருக்கும் கருவி. இதுபற்றிய முழுவிபரம் இந்த தளத்தில் இருக்கிறது (www.petrosense.com/PHA-100.html), இதன் மூலம் உடனடியாக நீரில் உள்ள எண்ணெயின் அளவினை களத்திலே கண்டறிய முடியும்.

இதனை பெறுவதற்கு இலங்கையில் இத்தகைய கருவியினை பெற்றுத்தரும் நிறுவனம் http://www.aipl.lk/ குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு இந்த தொழில்நுட்ப உதவியினை பெறமுடியுமாக இருந்தால், மேற்குறித்த அரச நிறுவனங்களின் உத்தியோகத்தவர்களின் உதவியுடனும், யாழ் பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் தொண்டர் அணி ஒன்றினை தொழிநுட்ப உதவிக்காக ஏற்படுத்துவதன் மூலம் உடனடியாக கிணற்றின் மாசுறு நிலைமையினை அறியமுடியும். இதன் மூலம் இந்த பிரச்சனையின் பாதிப்பு எந்த அளவு என்பதனை மக்கள் அறிந்து கொள்வதுடன் வீண் பயத்தினையும், பிரச்சனை உள்ள கிணறுகளிற்கான மாற்று வழி என்பதனையும் உடனடியாக கண்டறிய முடியும்.

இரண்டாவது இந்த பிரச்னைக்கு மூலமான எண்ணெய் கசிவு எங்கிருந்து வருகிறது என்பதனை சரியாக கண்டறிவது. வெறுமனே குறித்த ஒரு நிறுவனத்தை மட்டும் குற்றம்சாட்டப்படுவது இந்த பிரச்சனைக்கான காரணமே அன்றி தீர்வு அல்ல! இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதால் பிரச்சனையினை மேலும் சிக்கலாக்கபடுகிறது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று! குறித்த நிறுவனம் வலுவாக இந்த பிரச்னைக்கு தாம் காரணம் இல்லை என்று எதிர்ப்பினை தெரிவிக்கிறது.

அவர்களோ, அல்லது வேறு யார் என்பதனை கண்டறிய வேண்டிய அரச நிறுவனங்கள் இதுவரை ஆக்கபூர்வமாக தகவல்களை பொதுமக்களுக்கு தெளிவாக முன்வைக்கவில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் அதிருப்தியும், ஆத்திரமும் அடைய ஆரம்பித்து போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்களை  தனிமனித பயமுறுத்தலும், போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை நோக்கத்தில் இருந்து திசைதிருப்பும் முயற்சியும் தமது அதிகார, சுய நல நோக்கங்களுக்காக சிலரால் செய்யப்படலாம். ஆதலால் இந்த பிரச்சனைக்கான உண்மையான தீர்வு என்ன என்பதனை கண்டறிய வேண்டும். இந்த பிரச்சனையின் உண்மையான தீர்வு  எண்ணெய் எங்கிருந்து வருகிறது என்பதனை சரியான விஞ்ஞான முறைப்படி கண்டறிந்து அந்த மூலகாரணியை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தினை உடனடியாக வகுத்து செயலுக்கு கொண்டு வருவது.

மேலும் இந்த பிரச்சனை எல்லாவித பேதங்களையும் கடந்து தீர்வு ஒன்று மட்டுமே இலக்கு என்ற நோக்கத்தில் அணுகப்படவேண்டும், நான் இந்த கட்சியை சேர்ந்தவன், இது எனது பொறுப்பல்ல போன்ற எண்ணத்துடன் எவாரவது செயற்படுவார்களாக இருந்தால்  அடிப்படை மனித விழுமியங்களில் இருந்து தூரத்தில் இருக்கிறார்கள் என்பதனை கடுமையாக சுட்டிக் காட்ட வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உண்டு. ஏனெனில் நீர் என்பது அனைவருக்கும் பொதுவானது.


இந்த பிரச்சனை தொடர்பாக தீர்வினை நோக்கிய அனைத்துவகை ஆய்வு திட்டமிடலிலும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, ஆலோசனை என்பவற்றில  எனது நேரத்தினையும், அறிவினை, திறன்கள் பங்களிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இது தொடர்பான பொறுப்பில் இருப்பவர்கள் எனது உதவிக்காக எப்போதும் தொடர்பினை ஏற்படுத்தலாம்! 

No comments:

Post a Comment