Thursday 6 November 2014

கொஸ்லாந்தை 29/10/2014 நிலச்சரிவு – சூழலியல் ஆய்வு பார்வை

நிலச்சரிவு என்பது ஒரு நிலவியல் (Geological) சார்ந்த நிலம் சரிதல், கற்பாறைகள் சரிதல், மண் குவியல் சரிதல், சில இடங்களில் மலையாக குவிக்கப்பட்ட குப்பைகளின் சரிவு என்பவற்றை குறிக்கும். முதன்மைக்காரணி நிலத்தின் சாய்வும், அதன் உறுதியும் ஆகும். சாய்வாக இருக்கும் மண், கல் என்பன ஒரு இடத்தில் அசையாமல் இருப்பதற்கு அது தங்கியிருக்கும் கீழ் பகுதியுடன் குறித்த அளவு உராய்வு விசையினை கொண்டிருத்தல் அவசியமாகும். இந்த உறுதியினை குறைக்கும் காரணிகள் மண் சரிவின் ஆரம்ப தூண்டி விசை (initial trigger force) எனப்படும். 

இலங்கையினை பொறுத்தவரையில் இந்த ஆரம்ப தூண்டி விசை பெரும்பாலான நேரங்களில் பலத்த மழையாகவே இருக்கும். மற்றைய நாடுகளில் நில நடுக்கம், எரிமலை சீற்றம், பனி உருகுதல் போன்றவை காரணிகளாக காணப்படுகிறது. 

அதாவது பௌதீக, மனித காரணிகளால் நிலத்தின் சாய்வு உறுதிதன்மையினை இழக்கும் சாய்வுப்பகுதி மண் மழையினால் மேலும் உறுதி இழந்து சரியும் போது மண் சரிவு ஏற்படுகிறது. அதிக மழை மண் சரிவின் உடனடிக்காரணியாக இருந்தாலும் கீழ்வரும் காரணிகள் மெதுமெதுவாக இந்த நிலை ஏற்படுத்துவதற்கு எதுவாக அமைகின்றது; 

1. நிலத்திற்கு கீழான நீரோட்டம் மண்ணின் இறுக்கத்தினை குறைப்பது. 
2. மண்ணின் மேற்போர்வையில் உள்ள தாவரங்களை அழிப்பது, இதனால் மண்ணில் நீர் ஊடுருவி மண்ணின் இறுக்கத்தினை மேலும் குறைப்பது. 
3. தாவரங்கள் அகற்றப்பட்ட மண் மழை, ஆற்று நீரோட்டத்தினால் அரித்து செல்வது. 
4. சரிவான நிலங்களின் மேல் தாவர போர்வையினை அழித்து விவசாயம் செய்வது. 
5. மண்ணின் இறுக்க தன்மையிற்கு தாங்க கூடிய அளவிற்கு மேலாக கட்டிடங்களை கட்டுவது.

கொஸ்லாந்த மண்சரிவு இயற்கையின் சீற்றம் என்று பொதுவாக முத்திரை குத்தப்பட்டாலும் சரியான நிலவியல், நீர் வடிகால் முகாமைத்துவம் இன்மையால் ஏற்பட்ட ஒன்று என்ற கருதுகோளை வைப்பதற்கு சூழலியல் காரணிகள் ஆதாரங்களை தருகின்றன. 

உதாரணமாக மண் சரிவு தொடங்கிய இடமும் (படம் பார்க்க), மண்ணில் மூழ்கிய பிரதேசமும் செங்குத்தாக மழை நீர்வடிகால் செல்லும் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவற்றிக்கான நீர் வரவு செங்குத்து மலையின் மேற்பிரதேசத்தில் ஆரம்பமாகி கறுப்பு வட்டமிடப்பட்ட இடத்தில் விழுந்து மண்ணின் உறுதியினை குறைத்துள்ளது. இதனை மேற்பிரதேசத்தில் நடைபெறும் விவசாயம்/ தேயிலை செய்கை கல்வேலிகள், நீர்வேகத்தடைகள், புற்றரைகள் ஏற்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும். 



அடிப்படையில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணமாக மேற்புற மண் அரிப்பையும், நீர் வேகத்தினையும் கட்டுப்படுத்தாத விவசாய செய்கையினை காரணிகளாக கூறமுடியும்!