Monday 26 January 2015

சுன்னாகம் எண்ணெய் கழிவு பிரச்சனை – ஒரு சூழலியல் விஞ்ஞான புரிதல்

இன்று இலங்கையின் வடபகுதி யாழ்குடாநாட்டில் நிலத்தடி  நீரில் பெற்றோலிய கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக மிகப்பெரிய சமூக சூழல் பிரச்சனையாக எழுந்துள்ளது. இந்த பிரச்சனையில் மின்நிலையத்தினை நடாத்தும் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்த பிரச்சனை மிக ஆழமான பரிமாணம் கொண்டுள்ளது. விஞ்ஞான சூழலியல் புரிதலை பொதுமக்களுக்கு தருவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

நாம் வாழும் சூழலின் இயக்கவியலை புரிந்திருப்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகும். தமிழ் சித்த மரபு அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்ற இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்பினை விளக்குகிறது. இந்த அடிப்படையில் சூழலில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், மற்றவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வாழும் அனைவருக்கும் பலனை தந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இன்று விஞ்ஞானம், நவீன பொருளாதாரத்தின் பலன்களை அனுபவிப்பவர்களாக இருக்கும் அதேவேளை அவற்றால் ஏற்படும் பாரதூர விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே சூழல் பிரச்சனைகள் வந்த பின் தீர்க்க வேண்டியவை இல்லை, வந்தபின் தீர்ப்பது என்பது மிகசெலவீனமான, மீளமுடியாத ஒன்று என்பதுடன் வருமுன் காக்கும் நடவடிக்கையே அவசியமான ஒன்று!

இந்த அடிப்படையில் பெற்றோலியக்  கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுப்போது என்ன நடக்கிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பெற்றோலிய பொருட்கள் ஐதரோகாபன் எனும் இரசாயன வகுப்பை சேர்ந்தவை. இந்த வகை இரசயான பொருட்கள் பலது இருந்தாலும் கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது வகையானவைக்கே முறையான விஞ்ஞான ஆய்வுகள் நடாத்தப்பட்டு தகவல்கள் காணப்படுகின்றன. இவை நீரில் கரையா திரவங்கள். அதாவது நீருடன் கலக்கும் போது நீரும் இந்த ஐதரோ காபன்களும் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு அவத்தைகளில் காணப்படும். சிலவகை பகுதியாக கரையும் தன்மை உடையவை.

இவை நிலத்திற்கு செல்லும்போது நிலத்தின் மேற்பரப்பினையும், மண்ணில் காணப்படும் பகுதியாக நீர் நிரப்பல் பிரதேசத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும்.  இந்த மாசுபடுத்தல் மிக தீவிரமான ஒன்று.

நிலத்தில் பெற்றோலிய பொருட்கள் விடப்படும்போது புவியீர்ப்பு விசையின் மூலம் கீழ்நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். இது மண்ணின் இடைவெளியில் காணப்பட்டும் பகுதியாக நீரினால் நிரப்பபட்ட பிரதேசத்தின் ஊடாகவும், மண்ணின் இடைவெளிகளிலும் அவை நிரம்பும் வரை பயணிக்கும். இந்த பயணம் பெற்றோலியம் ஊடுபுகாத கற்படுக்கை காணப்படும் வரையோ அல்லது நீலத்தடி நீரின் கொள்ளளவு அதிகரித்து மண்ணில் நீரின் ஈரலிப்பு அதிகமாக இருப்பின் நீரின் தள்ளுவிசை மூலமோ கட்டுப்படுத்தப்படும். இத்துடன் வெப்பநிலை அதிகரிக்கும்போது இவற்றின் ஆவியாக்கம் அதிகரித்து மேற்புறத்திற்கு பரவ ஆரம்பிக்கும். இப்படி ஆவியாக்கல் மூலம் மேற்புறத்துக்கு பரவும் ஐதரோ காபன்கள் நிலத்தின் மேற்புறத்தில், அல்லது சற்று ஆழமான பகுதியில் ஒருவித சிக்கலான எண்ணெய் படலத்தினை உருவாக்கி பக்கவாக்காக அசைய ஆரம்பிக்கும். இதன் பரம்பல் கீழ்வரும் படத்தில் மாதிரியுருவாக காட்டப்படுள்ளது.

இந்த ஐதரோகாபன் நிலத்திற்கு, நிலத்தின் கீழ்புறத்திற்கு செல்லும்போது இவை மனிதரை நேரடி ஆவியாக்கல், திண்மபொருட்களாக அல்லது சிலபோருட்களில் உறிஞ்சப்பட்ட நிலையில் அடையலாம்.

இத்தகைய ஐதரோகாபன்களில் காணப்படும்மனிதனுக்கு, சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருட்களை பற்றி சற்று பார்ப்போம். இவற்றுள் முதன்மையானது பென்சீன் எனப்படும் இராசயானப்பொருள். இது அனேகமாக அனைத்து பெற்றோலிய கழிவுகளிலும் காணப்படும். இதன் உடனடி நச்சுத்தன்மை தலைசுற்று, வாந்தி, வயிற்றுகுமட்டல், தலைவலி என்பவற்றை ஏற்படுத்தும். அதிக அளவில் உட்சென்றால் வலிப்பு, கோமா, மரணம் என்பவற்றை ஏற்படுத்தும். குறைந்த அளவில் நீண்டகால உள்ளெடுத்தல் இனப்பெருக்க தொகுதி பாதிப்பு, மலட்டு தன்மை, ஜீன் மாறுபாடு, உடல் நிர்பீடத்தன்மை குறைவு, பல்வகை இரத்த புற்றுநோய் என்பவற்றை ஏறப்டுத்தும்.

மற்றைய இரசாயனப் பொருள் தொலுயீன் எனப்படும் ஐதரோ காபனாகும். இது மைய நரம்புத்தொகுதி பாதிப்பினை தரும். உடனடி பாதிப்புகள் மறதி, அசதி, இயக்க நரம்புத்தொகுதி பாதிப்பு, என்பன, அளவுக்கு அதிக உள்லேடுப்பு உடனடி மயக்கத்தையும் மரணத்தையும் தரும். நீண்டகால குறைந்தளவு உள்ளேடுப்பு மைய நரப்புதொகுதி பாதிப்பு, ஈரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும்.

மேலும் பெற்றோலிய பொருட்களில் குறிப்பாக மண்ணெண்ணெயில் கலக்கப்படும் MTBE என்ற ஒருவகை ஐதரோகாபன் நீரில் பகுதியாக கரையும் தன்மை உடையது. மண்ணெணெய் கழிவுகளை நிலத்தில் கொட்டும் போது இது நீருடன் கலந்து பாதிப்பினை தரும். இது ஒரு புற்றுநோய் காரணியாகும்.  பெற்றோலிய பொருட்களில் காணப்படும் நச்சுப் பொருட்களின் விகிதாசாரம் படம் - ௦2 இல் தரப்பட்டுள்ளது.

படம் - ௦2 


யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு
நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுகை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும் நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.
முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். 
இந்த அமைப்புதான் இன்றைய கழிவு எண்ணெய் பிரச்சனைக்கும் காரணம். கீழ்வரும் மாதிரி உருப்படத்தின் (படம் - ௦3) மூலம் வாசகர்கள் இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். 

கழிவு எண்ணெய் கலப்பு குற்றச்சாட்டுகளும், வாதப்பிரதிவாதங்களும்
இந்த விடயத்தில் எதுவித ஆய்வு முன்னெடுப்புகளும் இன்றி நொதன் பவர் கொம்பனி குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டை  குறித்த நிறுவனம் மறுத்துள்ளதுடன் தகுந்த பிரதி வாதங்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று. இது தொடர்பாக மூன்று கருத்துக்களை அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி முன்வைத்துள்ளார். அவையாவன;

1.       தமது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு எண்ணெய் நிலத்தில் சேர்வதில்லை என்றும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தாங்கிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பினரால் வெளியில் கொண்டு செல்லபபடுவதாகவும் கழிவு எண்ணெய் எரி உலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதனால், அதனை தமது நிறுவனம் வர்த்தக ரீதியாக நல்ல விலைக்கு விற்று வருவதாக, இந்த விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது ஒரு சிறந்த கழிவு முகாமைத்துவ முறை என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

2.       சிறிதளவு நேரமே செயற்படும் தமது நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் 2, 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகளுக்குச் சென்று கலப்பது சாத்தியமற்ற விடயம். இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஏனெனில் யாழ் குடாநாட்டு நிலவியல் அமைப்பில் இதற்கான சாத்தியம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே தகுந்த நிலவியல் ஆய்வுகள் அவசியம்.

3.       நொதன் நிறுவனம் சுன்னாகத்தில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அங்கு கழிவு எண்ணெய் நிரம்பிய ஒரு குளம் இருந்ததாகவும், 2012 ஆம் ஆண்டு அதனை மண் போட்டு நிரப்பி அந்த இடத்தில் துணை-மின்நிலையம் ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், ஆனால் எவரும் அந்த எண்ணெய்க் குளத்தில் நிரம்பியிருந்த கழிவு எண்ணெய்க்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராயவில்லை என்பது மிக முக்கியமான தவிர்க்க முடியாத காரணி, 

தற்போதைய நிலவரத்தின் படி சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் போன்ற பிரதேச கிணறுகளில் காணப்பட்ட கழிவு எண்ணெய் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பிரச்சனையின் முழுமையினையும் புரிந்து கொள்ள கீழ்வரும் கேள்விகளும் அத்தியாவசியானவை என கட்டுரை ஆசிரியரால் முன்மொழியப்படுகிறது. யாழ் குடாநாட்டில் இயங்கும் பெற்றோல் நிலையங்கள்(fuel stations), வாகன திருத்த நிலையங்கள் (service stations) என்பவற்றின் கழிவு முகாமைத்துவம் சரியான விதத்தில் இருக்கின்றனவா? இவற்றில் வெளியாகும் கழிவு எண்ணெய் எங்கு கொட்டப்படுகிறது? பெற்றோல் நிலையங்களின் நிலத்தடி சேமிப்பு தாங்கிகள் வருடாந்தம் தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறதா? மொத்தம் எத்தனை service stations இருக்கின்றன? மொத்தம் எத்தனை பெற்றோல் நிலையங்கள் இருகின்றன?

யாழ்குடாநாட்டின் திட்டமிடல், அபிவிருத்தி என்பன கட்டாயம் சூழலியல் தாக்க மதிப்பீட்டுடனும் முறையான கழிவு முகாமைத்துவத்துடன் செய்வது அத்தியாவசியமான ஒரு நிபந்தனை. இதனை பொறுப்பு வாய்ந்த சூழல் அதிகாரசபை அதிகாரி, மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தும் அதேவேளை அனைத்து பிரதேச வாசிகளும் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமான ஒன்று. 

No comments:

Post a Comment