Saturday 21 February 2015

சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெய் பிரச்சனை தீர்க்கப்படக்கூடிய ஒன்றா?

இலங்கையின் தற்போதைய அதியுச்ச சமுக சூழல் வாழ்வாதார பிரச்சனையாக கவனிக்கப்படவேண்டிய (??)  யாழ்குடாநாட்டின் சுன்னாக பிரதேசத்தில்  கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ள பிரச்சனையின் சரியான தீர்வினை எப்படி பெறலாம் என்பது பற்றிய முன்மொழிவுகளை இந்த கட்டுரை பொதுமக்களுக்கும், இந்த பிரச்சினையினை கையாள வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் முன்வைக்கிறது.

இந்த பிரச்சனையின் தீர்வுகள கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம். முதலாவது குறுகியகால உடனடி தீர்வுகள், இரண்டாவது நீண்டகால தீர்வுகள்.

குறுகிய காலதீர்வுகள்,மக்களின் குடிநீர் தேவைகளுக்குரிய நீரினை தாங்கிகள் மூலம் வழங்கல், இந்த பிரச்சனையிற்கு மூலமான எண்ணெய் கசிவு ஏற்படும் மூலத்தினை கண்டறிந்து உடனடியாக அதிலிருந்து எண்ணெய் மேலும் நிலத்தடி நீரிற்கு கலக்காமல் இருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கையினை எடுத்தல், கழிவு எண்ணெய் கலந்த நீரினை அருந்துவதால் ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பனவாகும். எனினும் இந்த தீர்வுகள் நீண்டகாலத்திற்கு செல்லுபடியானவை அல்ல. ஏனெனில் குறித்த பிரதேசத்தின்  நிலத்தடி  நீரின் தேவை என்பது குடிநீருடன் மட்டுப்படுத்த பட்ட தேவை ஒன்று அல்ல. விவசாயம் மற்றும் இதரதேவைகள் அனைத்துக்கும் நிலத்தடி நீர் ஒன்றே நீர் மூலமாக இருப்பதால் உடனடியாக நீண்டகால தீர்வினை நோக்கி நகர வேண்டியது பொறுப்பானவர்களின் கடப்பாடு ஆகும். உதாரணமாக குடிப்பதற்கு தாங்கிகளில் நீரினை கொடுத்தாலும் ஒரு நாளைக்கு  இரண்டு வேளை குளிப்பதற்கு அவசியமாக வெப்ப வலயமான யாழ்குடாநாட்டில் குளிப்பதற்கு குறிப்பிட்ட கழிவு நீர் கலந்த நீரினை பயன்படுத்துவதால் தோல்நோய், புற்று நோய் போன்ற பாரிய நோய்களுக்கு மக்கள் உள்ளாவார்கள் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் விழுப்புணர்வு ஏற்படுத்துவது என்பது ஒவ்வொருவரது கடமையாக கொண்டு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தமக்கு கிடைத்த தகவல்களை பகிருந்து கொள்வது அத்தியாவசிய கடமையாகும். அதேவேளை தகவல்களை பகிர்கின்றோம் என்று உண்மைக்கு புறம்பான மக்களை பீதியுறச்செய்யும் வகையில் பகிர்தலும் தவிர்க்கப்பட வேண்டும்.

நீண்டகால தீர்வு எனும் பதத்திற்குள் மூன்று பொறிமுறைகளை உள்ளடக்கலாம். முதலாவது யாழ் பிரதேசத்தின் அனைத்து தேவைகளும் நிலத்தடி நீர் என்ற ஒரு மூலத்திலேயே அடங்கியிருப்பது சமூகத்திற்கு மிக ஆபத்தான ஒன்று என்பது இந்த சம்பவத்தின் மூலம் மிக தெளிவாக்கப்படிருக்கிறது. ஆகவே வேறு நீடித்து நிலைத்திருக்க கூடிய நீர் மூலங்களை பெறவேண்டிய அவசிய தேவைக்கு யாழ் குடாநாடு இந்த அனர்த்தத்தின் மூலம் தள்ளப்படுள்ளது. இந்த அடிப்படையில் உடனடியாக நீர்வளங்கல் பொறிமுறை ஒன்றினை நிர்மாணிப்பது அதேவேளை இந்த தொகுதிக்கான நீர் எங்கிருந்து பெறுவது என்பதற்கான பதில் தெளிவாக நிலத்தடி நீராக இருக்க கூடாது என்பதுதான். அடிப்படையில் மேற்குறித்த கழிவு எண்ணெயினை நீர்ப்படுக்கையில் இருந்து சுத்திகரிக்கும் வரை வெயில் காலத்தில் நிலத்தடி நீரின் உறிஞ்சலை கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் விடப்பட்ட கழிவு நீர் நிலத்தின் அடியில் காணப்படும் karst எனப்படும் குழிகளில் ஆங்காங்கே நிலத்தடி நீரோட்டத்தின் மூலம் தேங்கி காணப்படும். ஆகவே ஒருபுறத்தில் உறிஞ்சல் கூடும்போது அந்த உறிஞ்சலை நிரப்புபவதற்கு நீர் அந்த திசை நோக்கி ஓடத்தொடங்க நீருடன் சேர்ந்து எண்ணெயும் பயணிக்க ஆரம்பிக்கும். இதனாலேயே ஒவ்வொரு நாளும் அதிசயம் நடப்பது போல் ஒவ்வொருவர் கிணற்றிலும் எண்ணெய் வந்த வண்ணம் உள்ளது. எனினும் மக்களின் நீர் தேவையினை வேறு ஒரு நீர் மூலத்தில் இருந்து  சரியாக பூர்த்தி செய்யாமல் இதனை கட்டுப்படுத்த முடியாது. மேலும் புதிதாக ஆழமான குழாய் கிணறு தோண்டுவது, யாழ்ப்பாண வட்டார வழக்கில் கூறப்படும் குண்டடித்தல் எனப்படும் கிணற்றை ஆழமாக்கும் செயல்களில் மக்கள் ஈடுபடாமல் இருப்பதால் மேலும் எண்ணெய் பரவல் நடைபெறுவதை சிறு அளவில் தடுக்கலாம். எனினும் பெருத்த மழையில் நீர்படுக்கை நீரினை பெறும்போது கட்டாயம் எண்ணெய் வெளிப்படுவதை தடுக்க மூடியாது. இதனை இல்லாமல் செய்வதற்கு நீர்படுக்கை சுத்திகரிப்பு எனும் செய்முறைகளுக்கூடாக மட்டுமே செய்யமுடியும். இதனை பற்று அடுத்த பகுதியில் சுருக்கமாக பார்ப்போம்.

யாழ்குடாநாட்டிற்கான மாற்று நீர் மூலங்கள்
தற்போது நீர் மூலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு என்ன என்ற கேள்விகளுக்கு இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம். ஒன்று ஏற்கனவே பெரும் சர்ச்சைக்குரிய இரணைமடு குடிநீர் திட்டம். ஆனால் இந்த திட்டம் மொழியப்பட்ட காலம் கிளிநொச்சி குறைந்த சனத்தொகையுடன் நீர் தேவைகள் குறைவாக காணப்பட்ட காலப்பகுதியாகும். ஆனால் வளர்ந்து வரும் அபிவிருத்தி நிலையில் எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்தேவைகள் அதிகரிக்கும் போது இந்த திட்டம் மாவட்ட முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

இரண்டாவது கடல்நீர் சுத்திகரிப்பு, இது செலவு மிக்க தீர்வு என்றாலும் மிகபயனுள்ள தீர்வு. ஏனெனில் ஏற்கனவே உவர்நீரான கரையோர பகுதி கிணறுகளை இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் மூலங்களாக பாவிக்கலாம். மேலும் குடாநாட்டை பொறுத்தவரை கடல் நீர் தாராளமாக கிடைக்க கூடிய ஒன்றாகும். கடல் நீர் மூலம் குடிப்பதற்கும், வீட்டு தேவைகளுக்குமான நீர் தேவை பூர்த்தி செய்து சமாந்திரமாக  நீர்படுக்கையினை சுத்திகரிக்கும் பட்சத்தில் பட்சத்தில் எதிர்காலத்தில் யாழ்குடாநாடு விவசாயத்திலும் நீர் வளத்திலும் தன்னிறைவினை காணும் ஒரு பிரதேசமாக மாறும்.

நீர்ப்படுக்கை சுத்திகரிப்பு
நீண்டகாலத்தீர்வுகளில் இரண்டாவது அமிசம், நீர்ப்படுக்கை சுத்திகரிப்பு ஆகும். யாழ் குடாநாட்டின் நீர்ப்படுக்கை பெரும்பாகும் சுண்ணாம்புக்கற்களால் ஆன நிலத்தடி குழிகளை கொண்ட அமைப்பாகும். அமைப்பில் உள்ளே சென்ற எண்ணெய் கழிவுகள் ஆங்காங்கே உள்ளே காணப்படும் குழிகளில் தேங்கி கொண்டு மழையில் மூலம் நீர்மட்டம் உயரும்போதோ அல்லது குறித்த பிரதேசத்தில் உறிஞ்சல் அதிகரிக்கும்போதோ அந்த திசையில் நகர்ந்து கிணற்றின் மூலம் மேலே வரும்.

நீர்படுக்கை சுத்திகரிப்பில் முதலாவது அமிசம் எண்ணெய் கசிவிற்கான மூலத்தினை கண்டறிந்து அதனை தடைசெய்தல். எண்ணெய் கசிவிற்கு காரணம் மின்நிலையம் என்று அதனை மூடுவதுதான் தீர்வு என்றும் முடிவெடுப்பதில் சில மேலதிக புரிதல் அவசியமான ஒன்று. உண்மையான பிரச்சனை நிலத்தினுள் செலுத்தப்பட்ட எண்ணெய் எந்த இடத்தில் இருகின்றது என்பதனை சரியாக கண்டறிதலும் அதனை உடனடியாக தகுந்த பொறியியல் உதவியுடன் அகற்றுதலும் ஆகும். இந்த இடம் குடாநாட்டு நிலவரத்தில் ஒரு இடத்தில் எண்ணெய் செலுத்தப்பட்டிருந்தாலும் நீரோட்டத்தில் பரவி பல்வேறு இடங்களில் நிலத்தடியில் காணப்படும் குழிகளில் தேங்கி பரவிக்கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம்.

முழுமையான நிலத்திடி நீர்படுக்கை சுத்திகரிப்பு (Restoration of contaminated aquifer) என்பது சூழல் நிலவியலாளர் (Environmental Geologist), நிலவியல் பொறியலாளர் (Environmental engineer) தலைமையில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டம் ஒன்றாகும். மேலும் நிலத்தடியினை ஆய்வு செய்யும் கருவிகள், முழுமையான ஆய்வு திட்டங்கள் அடங்கிய செயல்முறையாக இருக்க வேண்டும்.

நீண்டகால தீர்வின் நான்காவது அமிசம், எதிர்கால திட்டமிடலும் கண்காணிப்பு பொறிமுறையும். இதனுள் சுன்னாகம் போன்ற குடிமக்கள் நெருங்கி வாழும் விவசாய பகுதிக்குள் இப்படியான கழிவு களை உருவாக்க கூடிய தொழிற்சாலைகளை அகற்றி கடற்கரை ஓரமாக மக்கள் பாவனை அற்ற இடங்களில் உருவாக்கல், மாற்று சக்தி மூலங்களை பயன்படுத்தல், அபிவிருத்தி திட்டங்கலிற்கான அனுமதிகளில் சூழல் பாதுகாப்பு முகாமைத்துவத்தை பொறிமுறையினை கட்டாயாமாக்கி கடுமையாக கடைப்பிடித்தல் என்பனவாகும்.

எவ்வாறாயினும்  இயற்கை எனும் சிக்கலான சூழலிற் தொகுதியில் இவ்வாறான தவற்றை செய்தால் அதனை திருத்துவதும் மீட்டெடுப்பது என்பது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டுக்கு மிக கடினமான ஒன்று என்பது வெளிப்படையான உண்மை!



1 comment: